தமிழ்நாடு

நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை

Rasus

நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த 7ம் தேதி நடத்தப்பட்டது. ஆங்கிலம் மட்டுமல்லாது இந்தி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் போது மாணவ, மாணவிகளை சோதனை செய்த முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், பத்து மொழிகளில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாளை அடிப்படையாகக் கொண்டு வினாக்கள் கேட்கப்படவில்லை. மருத்துவ மாணவர்களைத் தேர்வு செய்ய நீட் ஒரே அளவீடாக அமையாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை வரும் ஜூன் 7ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கே வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 8ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.