உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உடற்தகுதி தேர்வு பெற்ற வீரர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 500 காளைகளும் 300 காளையரும் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் முக.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் மருத்துவ பரிசோதனை நடக்கும் இடங்களில் வீரர்களை உரிய மரியாதையுடன் நடத்தப்பட வில்லை எனவும், சுகாதாரமற்று தரையில் அமர வைக்கப்படுவதாகவும் வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உடற்தகுதி தேர்வு பெற்று போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் சீருடை அணிந்து இருக்கையில் அமரவைத்து மரியாதையுடன் நடத்தப்பட்டு வருவது ஜல்லிக்கட்டு போட்டியின் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.