மதுரையில் அரசின் பொங்கல் தொகுப்பு பரிசுக்கான டோக்கன் விநியோகத்தின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 1389 நியாய விலை கடைகள் மூலமாக மொத்தம் 9,26,000 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டு, அதற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெரும்பாலான நியாய விலை கடைகளில் இன்று பொருட்கள் விநியோகம் இருந்ததால், காலை முதல் டோக்கன்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் தங்களது பணிகளுக்கு ஏற்ப டோக்கன்களை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், கோரிப்பாளையம் அருகில் உள்ள ஜம்புரா புரம் பகுதியில் டோக்கன் விநியோகிப்பதற்காக நியாய விலைக்கடை ஊழியர்கள் இரண்டுபேர் கொண்ட குழு சென்றிருக்கிறது. அப்போது, இவர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை வழங்க முயன்றபோது, பொதுமக்கள் ஊழியர்களை முற்றுகையிட்டு டோக்கன்களை பெறுவதில் போட்டி போட்டுக்கொண்டு ஒரே இடத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, டோக்கன்களை பெறுவதில் போட்டி நிலவியதன் காரணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், டோக்கன்களை முழுமையாக வழங்காமல், ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியினை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டார்கள். தொடர்ந்து பொதுமக்கள் டோக்கன்களை பெருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் தங்களுக்கு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்துடன் மதுரையில் ஒவ்வொரு பகுதியிலும் நியாய விலைக்கடைகளை முற்றுகையிட்டு, பெரும்பாலான பகுதிகளில் கூட்டமாக கூடி இருக்கிறார்கள்.
தொடர்ந்து மதுரை மாநகரைப் பொருத்தவரை இதேபோன்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி தங்களுக்கான டோக்கன்களை பெறுவதற்காக கூடியிருந்து காத்திருக்கிறார்கள். தங்களது இல்லங்களுக்கே வந்த டோக்கனை வழங்குகிறோம் என்று அதிகாரிகள் கூறினாலும், பொதுமக்கள் அறியாமையின் காரணமாக ஒரே இடத்தில் கூடி டோக்கன் பெறுவதில் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.