உசிலம்பட்டி அருகே பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கிராமத்திற்கு வந்த அரசு பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தின் வழியாக உள்ள வழித்தடத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளப்பட்டி, வேப்பனூத்து கிராமத்திற்கு நான்கு முறை அரசு பேருந்துகள் சேவை இயங்கி வந்தாக கூறப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கை குறைவு என கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த சூழலில், கிராம மக்களும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் மனு அளித்தும் எந்த பயனும் இல்லாத நிலையே இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று முதல் மலைப்பட்டி கிராமம் வழியாக செல்லும் வழித்தடத்தில் மூன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனைக் கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து பத்து ஆண்டுகளுக்கு பின் தங்களது கிராமத்திற்கு வந்த அரசு பேருந்திற்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்று பேருந்தில் பயணித்தவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் தொடர்ச்சியாக இந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கினால் கிராமப்புற மக்கள் நகர் பகுதிக்கு வந்து செல்ல உதவியாக இருக்கும் எனவும் பேருந்து சேவையை மீண்டும் துவக்கிய அரசு அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.