மதுரை அண்ணாநகர் வைகை காலனி பகுதியைச் சேர்ந்தவர் மார்க்கண்டன். இவரது மனைவி ருக்மணி. பொதுபணித் துறையில் ஓட்டுநராக பணியாற்றிய மார்க்கண்டனுக்கும், ருக்மணிக்கும் கடந்த 1969 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இவர்களுக்கு ஒரு ஆண் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். பேரன் பேத்திகள் மற்றும் கொள்ளுப் பேத்திகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ருக்மணி உடல்நலமின்றி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மனைவியின் பிரிவால் தாங்க முடியாத வேதனையடைந்த மார்க்கண்டன் மனநலம் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுயநினைவின்றி இருந்துள்ளார்.
இதையடுத்து உரிய சிகிச்சை மற்றும் குடும்பத்தினரின் கவனிப்பால் தேறிய மார்க்கண்டன் மறைந்த தனது மனைவி ருக்மணிக்கு சிலை வைக்க முடிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்குச் சென்று விசாரித்துள்ளார்.
இறுதியாக மதுரை வில்லாபுரத்தில் உள்ள பிரசன்னா என்பவரிடம் தனது மனைவியின் சிலையை தத்ரூபமாக வடிவமைக்க நாள்தோறும் சிற்பக் கூடத்திற்குச் சென்று ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மனைவியின் உருவத்தை சிலையாக வடிவமைத்து வைக்க தனது வீட்டில் தனி அறையையும் ஒதுக்கியுள்ளார் மார்க்கண்டன்.
அதேபோல் மனைவியின் சிலைக்கு விலையுயர்ந்த பட்டுப்புடவை, மோதிரம், வளையல்கள், தோடு, மூக்குத்தி என மொத்தத்தையும் பார்த்து பார்த்து மார்க்கண்டன் செய்யச் சொல்லியுள்ளார்.
சிலையாக உள்ள தனது மனைவியை உயிரோடு இருப்பது போல நினைத்து தலையை தடவிக் கொடுத்து, தோள் மீது கை போட்டு சிலையையே உற்று நோக்கிய மார்க்கண்டனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவியின் சிலையை செய்து அதை எப்போதும் பார்க்கும் வகையில் வீட்டிலேயே நிறுவியுள்ள பாசக்கார கணவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.