மேலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பால் நோயாளிகள் அச்சம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கருங்காலக்குடி கிராமம். இங்கு, நான்கு வழிச்சாலை முன்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநோயாளிகள் மற்றும் பிரசவம், விபத்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அங்கு திடீரென வெளிநோயாளிகள் அறையின் பின்புறம் சுமார் 5 அடி நீள நல்லபாம்பு இருந்ததைக் கண்டு நோயாளிகள் அச்சமடைந்து அலறினர்.
இதுகுறித்து, ஆரம்ப சுகாதாரமைய வட்டார மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள், கொட்டாம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் அங்கிருந்த 5 அடி நீள நல்லபாம்பை பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலவிய பரபரப்பு அடங்கியது.