தமிழ்நாடு

“இழப்பீடு வழங்க நேரிடும்”- நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

“இழப்பீடு வழங்க நேரிடும்”- நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

webteam

மோசமான சாலைகள் காரணமாக விபத்து நடந்தால் தேசி‌ய நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மதுரவாயல் மு‌தல் வாலாஜா ‌வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காரைப்பேட்டை முதல் வாலாஜா வரை 36 கிலோ மீட்டருக்கு சாலையை சீரமைப்பதற்கான பணி 31 விழுக்காடு நிறைவடைந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை படித்துப் பார்த்த நீதிபதிகள், சாலையை சீரமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்படக் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், மாநில அரசின் பல்வேறு துறைகளிடம் ஒப்புதல் பெற வேண்டியிருப்பதால் தாமதம் ஏற்படுவதாகக் கூறினார். அனைத்து ஒப்புதல்களையும் எளிதில் வழங்கும் வகையில் ஒற்றை சாளர முறையை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச்‌செயலர் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும், இந்திய சாலை தர காங்கிரஸ் அமைப்பின் விதிகளைப் பின்பற்றி சாலைகளை அமைக்க வேண்டும் என்றும், மோசமான சாலைகள் காரணமாக விபத்து நேர்ந்தால் பாதிக்கப்பட்டவருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.