madras high court pt desk
தமிழ்நாடு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: இபிஎஸ் வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீபகாலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். அவை சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

webteam

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு (சாலை விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால்) தடை விதிக்கக் கோரியும், அவர் தனக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

EPS

இந்த மனுவில், கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக இபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டியுள்ளார்.

கோடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்வதற்கான அனுமதியை கோரிய மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்வதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.