OPS File image
தமிழ்நாடு

அதிமுக சின்னம்.. OPS-க்கு தடை தொடரும்!

அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதை எதிர்த்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த தனி நீதிபதி, ‘ஓபிஎஸ் அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் போன்ற அனைத்தையும் பயன்படுத்த தடை’ விதித்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு ஏற்கெனவே நவம்பர் 16 ஆம் தேதி விசாரிக்கப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “அதிமுக பெயர், கொடி, சின்னத்தினை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை தொடரும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தனி நீதிபதியின் தீர்ப்புக்கு என்ன காரணம்?

முன்னதாக தனி நீதிபதி அமர்வில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதாக கால அவகாசம் கேட்டார் ஓபிஎஸ். இதனால் மூன்று முறை வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் பதில் மனு தாக்கல் செய்வதற்கு பதில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்.

மேலும் பதில் மனு தாக்கல் செய்யவும் தொடர்ந்து அவகாசம் வாங்கிவந்தார். அதனாலேயே தனி நீதிபதிகள் தரப்பில் அதிமுக சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடைவிதிக்கப்பட்டது.