தமிழ்நாடு

வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிய செயலி - என்ன ஸ்பெஷல்?

வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிய செயலி - என்ன ஸ்பெஷல்?

கலிலுல்லா

வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்துகொள்ள செயலி உருவாக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதை முதல் விளைச்சல் வரை அனைத்துத் தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் உழவன் செயலி மூலம் அறிந்துகொள்ள முடியும் என்றும் அனைத்து தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் தெரிவிப்பதால் அதிக வருமானம் பெற வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்கள் வாரியாக பயிர்த்திட்டம் தயாரிக்க அனைத்து கிராம புல எண்களுக்கும் புவியிடக் குறீயீடு வழங்கப்படும் என்றும் தமிழகத்தின் ஏழு வேளாண் மண்டலங்கள் ஆயிரத்து 330 குறு வேளாண் மண்டலங்களாக பகுக்கப்பட்டு புதிய சாகுபடி திட்டம் படிப்படியாக பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்கள் அமைத்து உரம் பயன்பாடு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மண் வளம் என்ற தனி இணைய முகப்பு உருவாக்கப்படும் என்றும் அதன்மூலம் விவசாயிகள் மண் வளத்தினை தெரிந்துகொள்ள முடியும் எனவும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் புதிய மின்னணு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இத்திட்டம் 8 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.