தமிழகம் முழுவதும் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்நிலையில், இரவு ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் இந்த ஆண்டும் பறிபோய்விட்டதாக நாட்டுப்புறக் கலைஞர்கள் கலங்கியிருக்கிறார்கள்.
இவர்கள் அம்மனாக உருவெடுக்கிறார்கள். காளியாக ஆக்ரோஷம் காட்டுகிறார்கள். ஆனால், இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இவர்களுக்கு வாழும் வகைதான் தெரியவில்லை. அதிரும் வாத்தியங்களில், உச்ச ஸ்தாயி பாடல்களில் அரங்கையே அதிர வைக்கக் கூடிய இந்தக் கலைஞர்கள், இந்த ஆண்டும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கவலையிலும், அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
திருவிழாக்களில் கலை நிகழச்சிகளை அனுமதிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்றும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புற, இசைக் கலைஞர்கள் ஒன்று திரண்டு மனு அளித்தனர்.
இதேபோல, பெரம்பலூரில், பல்வேறு வேடங்களை அணிந்த கலைஞர்கள், ஆடிப்பாடியபடி, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதேபோன்று தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர் சங்கத்தின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இசைக்கருவிகளை இசைத்து பாடல்களை பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா நிவாரண உதவியாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட அனைத்து நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டத்திலும், இதே கோரிக்கையுடன், ஒலி ரூ ஒளி அமைப்பாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.