பட்டியல் இனத்தவர்கள் தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரூர் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளன.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆண்டியப்பன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 1956 ஆம் ஆண்டு 38 சென்ட் அளவில் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளி 2000 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்களிடம் பெற்று பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. சில ஆண்டுகளில் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
2010ஆம் ஆண்டு பள்ளியில் கூடுதல் கட்டிடத்திற்கான இடம் தேவைப்பட்டது. அதற்காக சிலர் வழங்கிய நிலம் குவாரிக்கு அருகே இருப்பதால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. இந்லையில் நான் மற்றும் என்னோட என்னுடைய கிராமத்தைச் சேர்ந்த சிலர் பள்ளிக்கான கழிவறை மற்றும் ஆய்வகம் உள்ளிட்டவைகளுக்காக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக எங்களுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் என்பது 85 சென்ட் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்குவதாக தலைமையாசிரியரிடம் தெரிவித்தோம். அதற்கான ஒப்பந்த ஆவணங்களையும் வழங்கினோம்.
அந்த தகவல் கரூர் முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் 2019 டிசம்பர் 12ல் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக சுமார் 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எங்கள் கிராமத்தினர் 44 பேர் இணைந்து எங்களுக்கு சொந்தமான நிலத்தை பள்ளிக்கு வழங்குவதற்காக பள்ளி பெயரில் பதிந்து ஆவணங்களையும் வழங்கினோம். இருப்பினும் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கவில்லை. 2020 மார்ச் மாதம் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை தொடங்க கோரி மனு அளித்தோம்.
எங்கள் பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களது பகுதியில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை கட்ட விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 2020 டிசம்பர் மாதம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதனடிப்படையில் நாங்கள் தானமாக வழங்கிய 1.85 ஏக்கர் நிலத்தில் கட்டிடம் கட்டப்பட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு முழுவதும் தவறானது. 1953ஆம் ஆண்டு முதல் இந்தப் பள்ளியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் துணை நிற்பதோடு பொருளாதார ரீதியாகவும் எங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து வருகின்றோம். 44 பேர் தங்கள் சுயநலம் பாராது, வழங்கிய நிலத்தில் பள்ளிக் கட்டிடம் கட்ட வேண்டாம் என முடிவெடுத்தது நவீன தீண்டாமையாகவே பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே கரூர், பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் பட்டியலின சமூகத்தினரால், தானமாக அளிக்கப்பட்ட 1.85 ஏக்கர் நிலத்தில் பள்ளிக்கான கூடுதல் கட்டிடத்தை கட்ட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. தானமாக வழங்கிய இடத்தில் ஏன் பள்ளிக்கான கூடுதல் கட்டிடத்தை கட்டக்கூடாது என்பதற்கான போதுமான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. ஆகவே கரூர் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தானமாக வழங்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்து பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.