விருதுநகரில் டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் வைத்து மதுபானம் விற்பனை செய்த கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 7-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. இருப்பினும் அரசு அதனை கண்டுகொள்ளாமல் டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதோடு ஆன்லைனில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனிடையே விருதுநகர் மாவட்டம் மாலைப்பேட்டை தெருவில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையின் பின்புறம் வைத்து மது விற்பனை நடைபெறுவதாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் நிகழ்வு இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போது கடையில் பணிபுரியும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கணேசன், விற்பனையாளர் மணிகண்டன் மற்றும் அவர்களது நண்பர்கள் 4 பேர் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் 154 மதுபாட்டில்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய டாடோ சுமோ காரையும் பறிமுதல் செய்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.