மதுரையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முழு உருவ மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து அடுத்த தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெறுவோம் என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சபதம் ஏற்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம், அதன் செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை, சேலம், கரூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 6 அடி உயர மெழுகு சிலை அமைத்து மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர், தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவை தான் ஆனால், துவண்டு விடாத நெஞ்சுரத்தோடு கழகத்தை காப்பாற்றவும், தமிழக மக்களுக்கு தொண்டாற்ற நம்மை நம்பி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிக்கவும் நம் அன்புத் தாயின் சபதத்தை நாமும் ஏற்போம் மீண்டும் கழகத்தை அரியணையில் அமரச் செய்வோம்.
உங்கள் நம்பிக்கை வீண் போக செய்ய மாட்டோம், கழகத்திற்கு வெற்றியை ஈட்டித் தந்து உங்கள் ஆன்மாவை மகிழ்விப்போம்' என சபதம் ஏற்றனர். தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராஜ் சத்யன், 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டதாக சொல்கிறார்கள். அது உண்மை அல்ல.
திமுக ஆட்சியில் மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை இது திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காட்டுகிறது. இதன் மூலம், மக்கள் திமுகவை ஏமாற்றி உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 2024 ஆம் ஆண்டு வரவுள்ள தேர்தலில் மீண்டும் அதிமுகவுக்கு மக்கள் மகத்தான வெற்றியை அளிப்பார்கள்' என கூறினார்.