தமிழ்நாடு

ஆசிஃபா பற்றி பேசுவதா ? கோவை மாணவி சஸ்பெண்ட் !

ஆசிஃபா பற்றி பேசுவதா ? கோவை மாணவி சஸ்பெண்ட் !

webteam

சிறுமி ஆசிஃபா பாலியல் வன்புணர்வு குறித்து வகுப்பறையில் பேசியதற்காக கோவையில் முதலாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி பிரியா என்பவர் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

கோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரியா.பொறியியல் பட்டதாரியான பிரியா, சட்டப்படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக சட்டப்படிப்பு படித்து வருகின்றார். மேலும் புரட்சி கர மாணவர் முன்னணி என்ற அமைப்பில் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை வகுப்பறையில் பொதுவான சம்பவங்கள் குறித்து பேசும் படி ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டுள்ளார். யாரும் பேசவராத நிலையில் மாணவி பிரியாவை ஏதாவது ஓரு தலைப்பில் பேசும்படி ஆசிரியர் தெரிவிக்கவே, மாணவி பிரியா காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது அங்கு வந்த உதவி பேராசிரியர் அம்மு என்பவர் மாணவியை திட்டியதுடன், வகுப்பில் இருந்த அந்த ஆசிரியரையும் திட்டியுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் பேச்சு குறித்து வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் சிலரும், உதவி பேராசியர் அம்முவும் முதல்வரிடம் புகார் அளிக்கவே, மாணவியை கல்லூரி நிர்வாகம் நேற்று சஸ்பெண்ட் செய்து அதற்கான உத்தரவு இன்று மாணவியிடம் வழங்கியது. அந்த உத்தரவில் மாணவர்களுக்கு இடையே பாலினம் மற்றும் மதரீதியாக மோதல் ஏற்படும் வண்ணம் பேசியும் அதை கேட்க சென்ற ஆசிரியையை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாகவும் , மத அரசியல் மற்றும் பாலியல் ரீதியான மோதல் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் மாணவியை தாற்காலிக நீக்கம் செய்வதாகவும் அந்த உத்திரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆசிரியரின் அனுமதியுடனே வகுப்பறையில் பேசியதாகவும்  ஆனால்  அது குறித்து எந்த வித விசாரணையும் நடத்தாமல் தன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மற்ற மாணவர்களிடமும் எந்த விசாரணையும் நடத்தவில்லை எனவும் மாணவி பிரியா தெரிவித்துள்ளார். ஆசிரியர் பேசச் சொன்னதால் தான் பேசியதாகவும் அதற்கான தன் மீது இந்த  நடவடிக்கை  கல்லூரி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் மாணவி பிரியா தெரிவித்துள்ளார். கல்லூரி முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்ப இருப்பதாகவும், விசாரணைக்கு அழைத்தால் சென்று தனது தரப்பு நியாயத்தை சொல்ல இருப்பதாகவும் அதை தொடர்ந்து சட்ட ரீதியாக செயல்படுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார் அவர். மே மாதம் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாணவி பிரியா தெரிவித்துள்ளார்.