சுஜித்தின் இறப்பு, ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் விழுந்தான். சுஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று தோல்வியில் முடிந்தது. சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுஜித் மறைவு குறித்து பேசிய லதா ரஜினிகாந்த், சுஜித்தின் இறப்பு ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ''சுஜித்தின் நிலை குறித்து ரஜினிகாந்த என்னிடம் கேட்டவாறே இருந்தார்; சுஜித்தின் இறப்பு ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு. சுஜித்தின் இறுதி நேர தவிப்பை வார்த்தைகளில் விளக்க முடியாது.
குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரம் செயல்படும் குழுவை அமைக்கவுள்ளோம். பெற்றோர்களின் பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. சாதி, மதம் கடந்து நாம் அனைவரும் சுஜித்திற்காக ஒன்றிணைந்தோம். எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ, அது நடந்துவிட்டது'' என தெரிவித்துள்ளார்.