சேலம் வெள்ளாளகுண்டம் அருகே 90 செண்ட் நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுத்து வரும் திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரை நிர்வாணத்துடன் முதியவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்த முதியவர் விஜயகுமார். இவர் தனது குடும்பத்துடன் அரை நிர்வாணத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்தார். இதைப் பார்த்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து உடை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... எங்களுடைய பூர்வீக சொத்தாக 90 சென்ட் நிலம் உள்ளது இதனை வாரிசுகள் ஐந்து பேருக்கு பாகமாக பிரித்து கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலம் தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இந்த நிலையில் சுலைமான் மற்றும் திமுக பிரமுகர் ஆனந்தன் உள்ளிட்டோர் வாழப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் தயாரித்து கிரயம் செய்து கொண்டனர்.
இதையடுத்து நிலத்தில் பயிரிட்ட சோள பயிர்களை அழித்ததோடு அங்கு இருந்த 24 தேக்கு மரங்களையும் வேரோடு பிடுங்கி எறிந்தனர். இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த நிலையில் கடந்த 17.3.2023 ஆம் தேதி திமுக பிரமுகர் ஆனந்தன் சுலைமான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து எங்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்திற்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மற்றும் முதல்வர் அவர்களுக்கும் மனு அனுப்பி உள்ளேன் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நிலத்தை அபகரித்த சுலைமான் மற்றும் திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிலத்தை மீட்டுத்தெர கோரியும் திமுக பிரமுகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முதியவர் அரை நிர்வாணத்துடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.