தமிழ்நாடு

சென்னையில் 4 ஆண்டுகளில் ரூ.12 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்

சென்னையில் 4 ஆண்டுகளில் ரூ.12 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்

webteam

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனையைத் தடை செய்ய தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சென்னையில் அவற்றின் விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை சார்பாக 1 லட்சத்து 10 ஆயிரத்து 636 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 20 ஆயிரத்து 415 கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. சுமார் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், கடந்த 2014 - 2015 ஆம் ஆண்டுகளில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 803 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு, அவற்றில் 22 ஆயிரத்து 928 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 - 2016 ஆம் ஆண்டில் 11 ஆயிரத்து 344 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 2 ஆயிரத்து 58 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2016 முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரத்து 568 கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, அவற்றில் 19 ஆயிரத்து 139 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பாக்குகள் பெரும்பாலும் பிற மாநிலங்களில் இருந்து கண்டெய்னர்கள் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்படுவதாகவும், அவை வடசென்னை பகுதியான சவுகார்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டு நகரின் பிற பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நீலாங்கரை முதல் திருவான்மியூர் வரையில் உள்ள பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வெளிப்படையாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் தங்கிப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்களே, தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பாக்குகளை அதிகம் வாங்கிப் பயன்படுத்துவோராக உள்ளனர் என்று கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.