கும்பகோணத்தில் தனது நண்பரைக் கொன்ற ரவுடியை, திட்டம் போட்டு கொலை செய்த கும்பல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் மோரிவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுள்ளான் சதீஷ். இவர் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பிரச்னை செய்து பணத்தை வசூல் செய்யும் குணம் கொண்ட சதீஷ், பலரையும் தாக்கியுள்ளார். இதனால் பெரும்பாலும் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்குபவர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சதீஷிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.
இந்த பணத்தை சதீஷ் வசூலிக்கும் போது, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை மோதலாய் மாற, விக்ரமை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சதீஷ் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான விசாரணையில் சதீஷ் ஆஜராகி வந்துள்ளார். வழக்கில் இருந்து தப்பித்துவிட்டால், பிரச்னை முடிந்தது என்ற எண்ணத்துடன் சதீஷ் இருந்துள்ளார். ஆனால் இதற்கிடையே கொலை செய்யப்பட்ட விக்ரமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சதீஷை கொலை செய்யும் திட்டத்துடன் இருந்துள்ளனர்.
இதற்காக பல திட்டங்களை தீட்டிய அவர்கள், தங்களது நண்பர் கொலை செய்யப்பட்ட அதே மாதத்தில் சதீஷை கொல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதில் விக்ரமின் நண்பர்கள் சிலர், யாரோ போல சதீஷிடம் வட்டிக்கு பணம் வாங்குவது போல பழகி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விக்ரம் வழக்கு விசாரணைக்கு வர, நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பியுள்ளார் சதீஷ். அவரை அப்போது தொலைபேசியில் அழைத்த விக்ரமின் நண்பர்கள், கொலை செய்யும் திட்டத்துடன் “அவசரமாக பணம் வேணும்” என்று நாடகமாடி வரச்சொல்லியுள்ளனர். விவரம் அறியாத சதீஷ் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
சதீஷ் சீனிவாச நல்லூர் பகுதி அருகே செல்லும் போது, காரில் காத்திருந்த விக்ரமின் நண்பர்கள் சதீஷ் வந்த இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளியுள்ளனர். இதில் நிலை தடுமாறி விழுந்த சதீஷை, காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல் சரமாரிய வெட்டிக்கொலை செய்துள்ளது. இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக விக்ரமின் நண்பர்கள் 5 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரித்துள்ளனர். அவர்களும் தாங்கள் செய்து குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.