கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையின் முதல் மதகு உடைந்த விவகாரத்தில் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 29ஆம் தேதி கேஆர்பி அணையின் முதல் மதகில் உடைப்பு ஏற்பட்டது. உடைந்த மதகை மாற்றி புதிய மதகு அமைக்கும் பணியை 20க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 20 அடி உயரமுள்ள உடைந்த மதகு அகற்றப்பட்டு, அங்கு 12 அடி உயரமுள்ள புதிய மதகு பொருத்தப்பட உள்ளது. கோடை காலத்தில் அணையின் மதகுகள் முழுவதுமாக பழுதுநீக்கப்பட்டு மீண்டும் உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணையை பழுது நீக்க ஒதுக்கப்பட்ட ரூ. 2 கோடி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.