காவிரி நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியினர், கருப்பு சட்டை அணிய வேண்டும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி கருப்பு சட்டை அணிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய கே.பி.ராமலிங்கம், “மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து வைக்கப்பட்ட நிலையில் வினாடிக்கு பத்தாயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடியாக குறைந்துள்ளது. அதேபோல் மேட்டூர் அணையில் நீர் இருப்பும் 46 டிஎம்சி-யாக குறைந்துவிட்டது. இருப்பினும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரை வழங்கவில்லை. இதனால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படுவதோடு எதிர்வரும் காலங்களில் 100 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவைக்கு தண்ணீர் கிடைக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
இப்படி அவசிய அவசரமான சூழலை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உணரவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் என்னவாகும் என்ற கவலை இல்லாமல் காங்கிரஸ் கட்சி கூட்டிய கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று இருக்கிறார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட 3 குழுக்களை அமைத்து வல்லுநர்களை நியமித்துள்ளது. அது பற்றி கவலை கொள்ளாமல் பிரதமர் மோடிக்கு எதிராக கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்.
தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்பவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்று அந்த கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றிருப்பது கண்டனத்துக்குரியது. ஆம் ஆத்மி கட்சியினர், அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு ‘அதிகார பகிர்வுக்கான அவசர சட்டம்’ தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் நிபந்தனை விதித்து கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்னைக்காக எந்த வித நிபந்தனையும் இன்றி முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்கிறார்.
விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நியாயமான உணர்வு முதலமைச்சருக்கு இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுகிறது. மத்திய அரசை பொருத்தவரை தமிழ்நாடு - கேரளா - புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்கள் ஒப்புதல் இருந்தாலே மேகதாது அணை கட்ட அனுமதி என்பதில் தெளிவாக உள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக கர்நாடகா சென்ற அண்ணாமலை, மேகதாது அணை கட்டுவது தொடர்பான தேர்தல் வாக்குறுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் வாக்குறுதியில் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு இருக்கக் கூடாது என்று நிறுத்தி வைத்தார்.
வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த அவரது தம்பி மகன் சுரேஷை நேரில் சென்று சந்தித்தார். அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், செயற்குழு கூட்டத்தில் “குற்றவாளி ஒருவரை சிறையில் சென்று சந்தித்த வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக தொடரலாமா?” என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதே முதலமைச்சர் இன்று செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காக துடிக்கிறார்.
குற்றவாளிக்கு துணை நிற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பொன்முடி வழக்கிலோ, கனிமொழி கைது செய்யப்பட்டபோதோ துடிக்காத முதலமைச்சர், செந்தில் பாலாஜிக்காக துடிக்கிறார். செந்தில் பாலாஜி வழக்கில் ஆணி வேராக முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து திமுகவில் இன்னும் 13 விக்கெட்டுகள் விழப்போகின்றன.
கடந்த ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை வெளிநாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பயணம் மேற்கொண்டு இருந்தார். அவர் எங்கே சென்றார், எதை கொண்டு சென்றார், யாருடன் சென்றார் என்ற விவரங்கள் ஜூலை 28ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அமைச்சருடன் சென்றவர்களின் பட்டியலில் 9 பேர்தான் அந்த விக்கெட்டுகள். மீதமுள்ள நான்கு பேர் யார் என்பதும் விரைவில் தெரியவரும்” என்று தெரிவித்தார்.