தமிழ்நாடு

‘தர்மத்தின் பக்கம் நீதி வந்துள்ளது’ - ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

‘தர்மத்தின் பக்கம் நீதி வந்துள்ளது’ - ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

சங்கீதா

அதிமுகவின் எதிர்கட்சித் தவைர் ஈ.பி.எஸ். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதி தர்மத்தின் பக்கம் வந்துள்ளதாக ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

அதன்படி வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட போது, பன்னீர்செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

அதை தொடர்ந்து புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த 10 மற்றும் 11ம் தேதிகள் விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இஇந்த வழக்குகளில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அளித்துள்ளப் பேட்டியில், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றரைக் கோடி தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்தெடுக்கப்பட்ட அண்ணன் ஓ. பன்னீர்செல்வம், கட்சியை கட்டுப்பாடோடு நடத்தவேண்டும் என்று சொன்ன நேரத்தில், சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி, 23-ம் தேதி பொதுக்குழுவில் தன்னிச்சையாக தன்னை தனி தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு, சதிக்கார செயலோடு செயல்பட்டதன் காரணமாக அந்த பொதுக்குழு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல், அந்தப் பொதுக்குழு கலைந்து சென்றது. 11-ம் தேதி பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி, கட்சி விதியை மதிக்காமல், கட்சிக்கு கட்டுப்படாமல் கட்சியின் சட்ட விதிகளை மீறி செயல்பட்டதால் நீதிமன்றத்தில், நீதிதேவதை இன்றைய தினம், சென்ற ஜூன் மாதம் 25-ம் தேதிக்குப்பிறகு என்ன நடந்ததோ அதையெல்லாம் ஒத்திவைத்து, தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியையும், அவரால் நீக்கப்பட்ட செயல்களும், அவரால் நியமிக்கப்பட்ட பதவிகளும் எல்லாம் நிராகரிக்கப்பட்டு, எப்போதும் போல் கட்சியை நடத்துவதற்கும், இனிமேல் ஆண்டுக்கு ஒருமுறைதான் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்ற கட்சியின் சட்டவிதிப்படி, இனிமேல் இந்த ஆண்டு யாரும் பொதுக்குழுவோ, செயற்குழுவோ நடத்த முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம். நீதி தர்மத்தின் பக்கம் வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.