தமிழ்நாடு

கோடநாடு பங்களாவிற்கு யாரெல்லாம் வருவார்கள்?: 3-வது நாளாக பூங்குன்றனிடம் விசாரணை

கோடநாடு பங்களாவிற்கு யாரெல்லாம் வருவார்கள்?: 3-வது நாளாக பூங்குன்றனிடம் விசாரணை

kaleelrahman

கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இங்கு வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ஏப்ரல் 29, 30 ஆகிய இரு தினங்கள் 18 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் கடந்த மே 2-ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று 3-வது நாளாக மீண்டும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே கோடநாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள் , அங்கு என்னென்ன ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறித்து பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து கோடநாடு வழக்கு தொடர்பாக கைதான நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பரிசுப் பொருள்கள் கோடநாடு பங்களாவில் இருந்ததுதானா என்பது குறித்தும் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது நாளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது