மூன்று நாள் தொடர் மழைக்குப் பின்னர் முகில் கடலாக கொடைக்கானல் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் முன்பனிக்காலம் துவங்கியதன் அறிகுறிகள் கடந்த டிசம்பர் மூன்றாவது வாரம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உணரத்துவங்கியது. அதன் பின்னர் டிசம்பர் மாத இறுதி வரை குளிர்கால காலநிலை நிலவிய நிலையில், டிசம்பர் மாத இறுதியில் மீண்டும் மழை துவங்கி, மூன்று நாட்கள் நீடித்தது.
தற்பொழுது மழை முழுவதுமாக ஒய்ந்து, பின்பனிக்காலத்தின் கடைசி கட்ட பனிமூட்டம் நிலவத்துவங்கியுள்ளது. முகில் கூட்டங்கள் கடல் அலைபோல கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில், கண் கவரும் வண்ணம், மனதை வருடும் காட்சிகளாக நிலைகொண்டுள்ளது.
இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. முன்பனிக்காலம் விரைவில் நிறைவடைந்து, கடும் குளிரை கொடுக்கும் உறைபனிக்காலம், விரைவில் துவங்கி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வெண்பனி போர்வை போர்த்தும் காலநிலை, பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.