தமிழ்நாடு

முன்பனி காலம் கடந்து உச்சகட்ட உறை பனி காலத்துக்கு தயாராகும் கொடைக்கானல்

முன்பனி காலம் கடந்து உச்சகட்ட உறை பனி காலத்துக்கு தயாராகும் கொடைக்கானல்

நிவேதா ஜெகராஜா

தமிழக மலைப்பகுதிகளில் உறைபனியின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் உச்ச கட்ட குளிர் காலத்தை நெருங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முதல் முன்பனிக்காலத்தின் தாக்கம் ஏற்படத்துவங்கி, சமவெளி பகுதிகளில் மூடுபனியின் தாக்கம் அதிகரிக்கத்துவங்கியது. அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக பனியின் தாக்கம் அதிகரித்து, மலைப்பகுதிகளில், நீர் நிலைகளுக்கு அருகே மட்டும் உறைபனியின் தாக்கம் லேசாக தென்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது முன்பனிக்காலத்தின் உச்சம் உயரத்துவங்கி, விரைவில் கடும் உறைபனிக்காலம் வரும் சூழல் உருவாகியுள்ளது.

முன்பனிக்காலத்தின் உச்சபட்ச பனி படரும் நிலையாக, கிழக்கு அடிவானத்தில் கோடு போல தோற்றம் கொண்ட பனி மூட்டம், சமவெளி பகுதிகளை முழுவதும் மூடியுள்ள காட்சிகள் தெரியத்துவங்கியுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி கோக்கர்ஸ் பள்ளத்தாக்கில் இருந்து காணும் பொழுது, இக்காட்சிகள் நமக்கு தெரிகின்றன.

இங்கு நின்று பார்க்கையில், பனிக்கோட்டுக்கு மேலே கதிரவன் உதயமாகும் காட்சிகள் கடலும் நிலவும் போல மனதை வருடுகின்றன. இந்நிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் மழை இல்லாத காலநிலை இதே போல நிலவினால், கடும் உறைபனிக்காலம் முழு வீச்சில் மலைப்பகுதிகளில் நிலவும் என்றும், அதே கால கட்டத்தில், சமவெளி பகுதிகளில் உச்சபட்ச பனிக்காலம் துவங்கி, இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை அடுத்து தை மாத இறுதியில் இருந்து, பின்பனிக்காலம் துவங்கி, கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக பனியின் தாக்கம் குறையும் என, மலைப்பகுதிகளில் உள்ள பூர்வ குடி மக்கள் கூறுகின்றனர்.

இளவேனில் காலம், கோடைகாலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் ஆகிய நான்கு பருவ காலங்களில் குளிர்காலமாக உள்ள பனிக்காலமே நம் அனைவரின் மனதையும் வருடிச்செல்லும் காலமாக உள்ளது, ஆச்சர்யமில்லைதான்.

படங்கள் மற்றும் செய்தி: மகேஷ் ராஜா