தமிழ்நாடு

கேரளா டூ தமிழ்நாடு: மது வாங்க வரும் நபர்களால் கோவை மாவட்டத்தில் நோய் பரவும் அபாயம்

கேரளா டூ தமிழ்நாடு: மது வாங்க வரும் நபர்களால் கோவை மாவட்டத்தில் நோய் பரவும் அபாயம்

kaleelrahman

கேரளாவில் இருந்து மது வாங்க தமிழகம் வரும் மது பிரியர்களால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பெரும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்னர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெரும் தொற்று காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக தளர்வுகள் இல்லாத மாவட்டமாக இருந்தது. தற்போது கொரோனா பெரும் தொற்று குறைந்துள்ள சூழலில் கோவை மாவட்டத்தில் மது கடைகள், நகை கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு வழங்கியது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ளது. தற்போது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்துள்ளதால் தளர்வுகள் இன்றி கடும் கட்டுப்பாட்டை அம்மாநில மக்களுக்கு கேரள அரசு விதித்துள்ளது. இதனால் பாலக்காடு மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ள தமிகத்தின் கோவை மாவட்டத்தில் கேரள மாநில மது குடிப்போர் அதிகளவில் வர துவங்கியுள்ளனர். இதனால் கொரோனா கட்டுபாட்டில் இருந்து மீண்டுவரும் கோவை மாவட்டம் மீண்டும் நோய் பரவலுக்கு ஆளாகும் சூழல் உருவாகி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழக கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி பாலக்காடு இடையே சுமார் ஆறு வழித்தடங்கள் உள்ளன. எனவே கேரளாவில் இருந்து மது வாங்க வருபவர்கள் சுலபமாக தமிழகத்திற்குள் நுழைந்து மதுவை வாங்கி செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும். எனவே இதை கருத்தில் கொண்டு தமிழக கேரள மாநிலங்களை இணைக்கும் இந்த ஆறு வழித்தடத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தி சோதனையின் அடிப்படையில் அங்கிருந்து வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி நோய் பரவலை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.