கேரளாவில் பெய்துவரும் கன மழையால் இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதகுகள் வழியாக நீர் திறக்கப்படும் இந்தக் காட்சி கண்களைக் கவர்வதாக இருக்கிறது.
விண்ணில் இருந்து பார்க்கும் போது மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இடுக்கி அணை, குறவன்-குறத்தி மலைகளுக்கு இடையே ஆர்ச் வடிவில் கட்டப்பட்டுள்ளது. 1973ல் கட்டப்பட்ட இந்த அணை, கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 403 அடி உயரம் கொண்டது. தொடர் மழையினால் அணையின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 401 அடியாக உயர்ந்துள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பி வருவதால் பாதுகாப்பு காணரங்களுக்காக முன்னெச்சரிக்கையாக வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆகையால் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதிலும் அணை நிரம்பி 5 மதகுகளும் திறக்கப்படுவது இதுவே முதன்முறை. அணையில் இருந்து திறக்கப்படும் இந்த நீர், செறுதோணி ஆற்றில் கலந்து வாழைத்தோப்பு வழியாக செல்கிறது. எர்ணாகுளம் மாவட்டத்திலும் நீர் பாய்ந்து இறுதியாக அரபிக் கடலில் கலக்கிறது. அதிக அளவு நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.