கீழடியில் நடைபெறும் ஏழாம் கட்ட அகழாய்வில், அகரத்தில் சுடுமண் குழாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது இது தண்ணீரை சிக்கனமாகவும், விரைவாகவும் கொண்டு செல்ல பயன்படுத்தியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், அஜய், ரமேஷ், காவ்யா உள்ளிட்டேர் தலைமையில் நடந்து வருகின்றன. செப்டம்பருடன் இந்த பணிகள் முடிவடைய உள்ள நிலையில் கீழடியில் இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு உறைகிணறு, சுடுமண் விளக்கு, மூடியுடன் கூடிய பானை, பானை ஓடுகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
இதுவரை கிடைத்த பொருட்களை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்தி வருகின்றனர். அகரத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு தலையலங்காரத்துடன் கூடிய பொம்மை, புகைபிடிப்பான், விலங்கு உருவம் கொண்ட பொம்மை, உறைகிணறு, மூன்று அடுக்குகள் கொண்ட சுவர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இரட்டை சுடுமண் குழாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தலா 15 செ.மீ நீளமுள்ள இந்த குழாயின் ஒருபுறம் பெரிதாகவும் மற்றொரு புறம் சிறியதாக ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகரத்தில் கடந்த ஆறாம் கட்ட அகழாய்வில் ஏழு உறைகிணறுகள் கண்டெடுக்கப்பட்டன. தற்போதும் சிதிலமடைந்த நிலையில் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே உறைகிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கொண்டு செல்வதற்கு இந்த சுடுமண் குழாய் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
2600 ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை சிக்கனமாகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டு செல்வதற்கு இந்த சுடுமண் குழாய் பயன்படுத்தியிருக்க கூடும் என கூறப்படுகிறது.