காட்டுப்பள்ளி அருகே நடுக்கடலில் படகின் மீது கப்பல் மோதியதில் படகு மூழ்கி காசிமேடு மீனவர்கள் கடலில் விழுந்தனர். 2 மணிநேரம் கடலில் தத்தளித்தவர்களை காசிமேட்டில் இருந்து 3 படகுகளில் சென்ற மீனவர்கள் மீட்டனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நள்ளிரவு 7 மீனவர்கள், மரபாடி படகில் மீன்பிடிக்கச் சென்றனர். 5 நாட்கள் கடலிலேயே தங்கி மீன் பிடிக்கத் தேவையான உணவு, டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்று காட்டுப்பள்ளி அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, அதிகாலை கப்பல் ஒன்று, அந்த படகின் மீது மோதியது. இதில் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த 7 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடலில் தத்தளித்த நிலையில், வயர்லெஸ் மூலம், காசிமேட்டில் உள்ள மீனவர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து 3 படகுகளில் சென்ற மீனவர்கள் 2 மணி நேரத்திற்குப்பிறகு கடலில் தத்தளித்த லோகு, மணி, ரஞ்சித், ராஜவேலு, ஹரி, கோபால், அஜித் ஆகிய 7 பேரை மீட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.