தமிழ்நாடு

ரூ.100 கோடியை வசூலிப்பது எப்படி?: விளக்கம் கேட்கும் கர்நாடக அரசு

ரூ.100 கோடியை வசூலிப்பது எப்படி?: விளக்கம் கேட்கும் கர்நாடக அரசு

webteam

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிப்பது எப்படி என்று விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விட்டு அபராதத் தொகையை வசூலிக்க முடியுமா? அல்லது ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை கைவிடப்பட்டதாக கருத முடியுமா? என்று கர்நாடக அரசு கேட்டுள்ளது. குன்ஹாவின் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகளாக அறிவித்த உச்சநீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதேநேரம் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை வசூலிக்கும் முறை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்ட மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதமாக பெங்களூரு நீதிமன்றம் விதித்திருந்தது. வழக்கில் மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தங்களது தண்டனை காலமான நான்காண்டுகள் சிறை தண்டைனையை அனுபவிக்க பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.