திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர். இங்கு வைத்துதான் சூரணை முருகன் வதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏன் ஒருசில வெளிநாடுகளில் இருந்தும் கூட சூரசம்ஹாரத்தை காண பக்தர்கள் வருவார்கள்.
கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளில்தான் சூரசம்ஹாரம் நடைபெறும். இதற்காக மொத்தம் 6 நாட்கள் பக்தர்கள் விரதம் கடைபிடிப்பார்கள். இந்நிலையில் யாகசாலை பூஜையுடன் சந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ளது. இதனையொட்டி கோயிலின் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. பக்தர்கள் கடலில் நீராடி மனம் உருக முருகனை வேண்டி தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். பக்தர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் போலீசார் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 13-ஆம் தேதி அதாவது செவ்வாய்கிழமை நடைபெற உள்ள நிலையில் இந்த 6 நாட்களும் பக்தர்கள் தங்களது விரதத்தை முறையாக கடைபிடிப்பார்கள். பெரும்பாலான பக்தர்கள் நீர் ஆகாரத்தை மூன்று வேலையும் உணவாக எடுத்துக் கொள்வார்கள். ஒருசிலர் உடல்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு விரதத்தை மேற்கொள்வார்கள். சூரணை முருகன் வதம் செய்தவுடன் கடலில் நீராடி தங்களது விரதத்தை பின்னர் முறித்துக் கொள்வார்கள்.
பொதுவாக திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத பெண்கள் இந்த சஷ்டி நாளில் விரதம் இருந்தால் அவர்கள் விரைவில் கர்ப்பம் அடைந்து குழந்தையை பெற்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமில்லால் நினைத்த காரியம் நடைபெறும் என பல வேண்டுதல்களோடு பக்தர்கள் தங்களது விரதத்தை கடைபிடிப்பார்கள்.