விபத்தில் இறந்தவருக்கு நீதி கேட்டு போராட்டம் PT
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் பலி!

காஞ்சிபுரம்: விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சீனிவாசன் என்பவர் சாலை விபத்தில் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.

PT WEB

காஞ்சிபுரத்தை அடுத்த குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் என்பவரின் மகன் சீனிவாசன் (27). இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்தப்பணியில் ப்ளம்பராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு குண்டுகுளம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் 10-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், சந்தேகத்தின்பேரில் சீனிவாசனை மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிக மதுபாட்டில்கள் வைத்திருப்பது தெரிந்ததை அடுத்து, சீனிவாசனை அவரது இரு சக்கர வாகனத்திலேயே காவலர் ஒருவர் அழைத்துச் சென்றிருக்கின்றார்.

காஞ்சிபுரம் புறவழி சாலையான கிளம்பிசெவிலிமேடு சாலை வழியாக பைக் சென்று கொண்டிருந்தபோது சீனிவாசன் தப்ப முயற்சித்துள்ளார். இதற்கிடையே சீனிவாசன் தன் தம்பியிடம், காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்வதாக தொலைபேசி மூலம் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் சீனிவாசன் தப்பமுயல்கையில் அந்த வழியாக வந்த தொழிற்சாலை பேருந்து அவர்மீது மோதி, சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலானது பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று பிரேத பரிசோதனையானது காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தபோது, சீனிவாசனின் குடும்பத்தினர் அவர் உடலை வாங்கி மறுத்தனர். தொடர்ந்து சீனிவாசன் குடும்பத்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மக்கள் மன்ற நிர்வாகிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் வாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீனிவாசனின் உயிரிழப்பிற்கு உரிய விசாரணை வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையெடுத்து அவர்களிடம் பேசிய நீதிபதி, இவ்வழக்கில் நிச்சயம் உரிய விசாரணை செய்யப்படும் என உறுயளித்தார். தொடர்ந்து சாலை மறியலை மட்டும் அவர்கள் கைவிட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.