காஞ்சிபுரத்தில் இரவு நேரங்களில் கால்நடைகள் கடத்துபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாலையில் திரியும் மாடுகள், சமீப காலமாக மாயமாகி வருகிறது. மாடுகளை மர்ம கும்பல் கடத்துவதாக, ஏற்கனவே பல புகார்கள் இருந்தன. சில மாதங்கள் முன், பிள்ளையார்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முருகானந்தம், மாடு கடத்தும் கும்பலை பிடிக்க முயன்றபோது, உதவி ஆய்வாளர் மீது, மர்ம கும்பல், தாக்குதல் நடத்தியது.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் நகரில், இரவில் சுற்றித் திரியும் மாடுகளை, மர்ம கும்பல் கடத்தி வருவது தெரியவந்தது. இந்தக் கும்பலைப் பிடிக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, அதிகாலை சாலையில் நின்ற மாட்டை மடக்கி மர்ம கும்பல் ஒன்று வாகனத்தில் ஏற்றும் காட்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், அதைத் தட்டி கேட்டவரை அந்த மர்ம கும்பல் தாக்கும் காட்சியும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது. இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர்யிடம் கேட்டால், இதுவரை ஒரு புகார் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்தார். சில காவல் உயர் அதிகாரிகளை கேட்டபோது, கால்நடை திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.