தமிழ்நாடு

காஞ்சி: அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு

காஞ்சி: அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு

webteam

காஞ்சிபுரம் அரசு புற்று நோய் மருத்துவமனையில், பட்ட மேற்படிப்பு, உயர் சிறப்பு பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் காரப்பேட்டையில், 1969ல், உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடன், புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் துவக்கப்பட்டது. தற்போது, 290 உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த, 2019ல், பொன்விழா கண்ட இம்மருத்துவமனை, தமிழக அரசால், 120 கோடி ரூபாய் மதிப்பில், 500 உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுடன், 'சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்' எனும், சீர்மிகு சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கி உள்ளன.

அதிநவீன தொழில்நுட்ப முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் இம்மருத்துவமனையில் வரும் 2020 - 21ம் கல்வியாண்டு முதல், எம்.டி., கதிரியக்க சிகிச்சை பட்ட மேற்படிப்புக்கு, நான்கு இடங்கள் துவங்கப்பட உள்ளது. மேலும், எம்.சி.ஹெச்., புற்று நோய் அறுவை சிகிச்சையியல் எனும், உயர் சிறப்பு பட்ட மேற்படிப்புக்கு இரண்டு இடங்கள் துவங்கப்பட உள்ளது. இவற்றுக்கு, டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த படிப்புகள், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்தின் கீழ், செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரியுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட உள்ளது. இம்மருத்துவமனையில், ஏற்கெனவே, எம்.எஸ்சி., கதிரியக்க இயற்பியல் எனும் மூன்றாண்டு பட்ட மேற்படிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.