கலைத்துறையில் சிறப்பாக செயல்பட்ட 201 கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்துள்ளது.
இயல், இசை நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற பிரிவுகளில் 2011ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரைக்கான விருதுகள் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. திரைப்பட நடிகர்களான விஜய்சேதுபதி, பிரபுதேவா, சசிகுமார், காஞ்சனா தேவி, குட்டிபத்மினி, நளினி, பிரியா மணி உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, நகைச்சுவை நடிகர்களான பாண்டு, டி.பி.கஜேந்திரன், சிங்கமுத்து, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, தம்பிராமையா போன்றவர்களுக்கும் கலைமாமணி விருது பெற்றனர். இயற்றமிழுக்காக லேனா தமிழ்வாணன், திருப்பூர் கிருஷ்ணன், வாசுகி கண்ணப்பன் உள்ளிட்டோருக்கும் விருது வழங்கப்பட்டது. இதே போன்று மிருதங்கம், நாதஸ்வரம், பரதநாட்டியம், கரகாட்டம், வீணை, சொற்பொழிவு, காவடி, பொம்மலாட்டம், பம்பை வாத்தியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகளுடன் 3 சவரன் பொற்பதக்கம், சான்றிதழையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை 2ஆயிரம் ரூபாயிலிருந்து 3ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.