கலைஞர் 100 நூல் வெளியீட்டு விழா ட்விட்டர்
தமிழ்நாடு

“திமுகவில் ஏன் இன்னும் சேரலைன்னு தந்தி போட்டார் கலைஞர்” - மநீம தலைவர் கமல்ஹாசன் சுவாரஸ்ய பேச்சு!

விகடன் பதிப்பகத்தின் ‘கலைஞர்100: விகடனும் கலைஞரும்’ நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இந்து ராம் போன்றோர் கலந்துகொண்டனர்.

Angeshwar G

இந்நிகழ்வில் பேசிய கமல்ஹாசன், “ஆலமரத்தின் அடியில் விருட்சங்கள் வளராது எனும் பொதுக்கூற்றை முறியடித்து தானும் ஒரு விருட்சமாக வளர்ந்துகொண்டிருப்பவருக்கு (முதல்வர் ஸ்டாலின்) வாழ்த்துகள். ஜனநாயகம், சமூக நீதி, கூட்டாட்சிக் குரல் என தென்னிந்தியாவின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்து கொண்டுள்ளார் நமது முதல்வர். சமூகத்தின் எந்தப் பிரிவு மக்கள் பலன் பெற்றார்கள் என்பதுதான் முக்கியம். தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம். கலைஞரின் தர்மம் அசோக சக்கரத்தின் தர்மம்.

கலைஞர் வசனம் எழுதிய பேப்பரை, மாடர்ன் தியேட்டரில் பாதுகாத்து வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதை நானே அவரிடம் வந்து சொல்லி, ‘எதற்காக இப்படி எழுதினீர்கள்’ என்ற காரணத்தையும் கேட்டேன். காட்சியை விவரிக்கும்போது அதை அமைக்கும் விதத்தையும் பூடகமாகச் சொல்லி இருந்தார். அக்காலத்தில் ஷாட் எப்படி இருக்க வேண்டும் என எழுத்தாளர் சொல்லக்கூடாது. டைரக்டர்தான் முடிவு செய்ய வேண்டும். அதை நான் அவரிடம் சொன்னபோது, ’அதை கவனித்தாயா நீ, நல்லவேளை அந்த டைரக்டர் கவனிக்கவில்லை’ என்றார்.

‘சட்டம் என் கையில்’ எனும் படத்தில் நடித்தேன். தயாரிப்பாளர், இயக்குநராக இருந்தவர் டி.என்.பாலு. அவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேறுபாடுகளும் கோபங்களும் இருந்துள்ளது. அவரை அந்த விழாவிலேயே வைத்து, கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் என் விழா என்பதால், ’விழா முடிந்ததும் கைது பண்ணுங்கள்’ என சொல்லியது அவர் (எம்.ஜி.ஆர்) காட்டிய கருணை. கலைஞர் கடைசியில் பேசப்போகிறார். நான் நன்றியுரை சொல்லும்போது தயாரிப்பாளர் டி.என்.பாலு எனச் சொல்லும் போது அவரைக் காணோம். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அடுத்து கலைஞர் வந்து பேசினார். ’சட்டம் என் கையில் எனும் படத்தை இயக்கித் தயாரித்த நண்பர், சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார், தப்பித்துப் போய்விட்டார்’ என்றார். போலீஸ்காரர்கள் எல்லாம் நின்றுகொண்டுள்ளார்கள். உட்லண்ட்ஸ் ஹோட்டலில்தான் நடந்தது. பின்னாடி வண்டியில் வைத்து அவரைக் கடத்திக்கொண்டு போனது எங்கள் அண்ணன் சாருஹாசன். அவர் திமுக வக்கீல். 1983இல், ’திமுகவில் நீ ஏன் இன்னும் சேரவில்லை’ எனும் தந்தி அடித்திருந்தார் கலைஞர். அப்போதுதான் என் கேரியர் ஆரம்பித்தது. இதற்கு என்ன பதில் சொல்வது, பதில் தந்தி போடுவதா? பயம், தயக்கம், பதட்டம் சேர்ந்தது. ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன். ஆனால், அவர் அதைப் புரிந்துகொண்டு அந்தப் பேச்சை அவர் அதன்பின் எடுக்கவில்லை” என்றார்.