தமிழ்நாடு

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு நன்னிலத்தில் சிலை திறப்பு

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு நன்னிலத்தில் சிலை திறப்பு

webteam

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடியில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் சிலை திறக்கப்பட்டுள்ளது.  


இயக்குநர்.கே.பாலச்சந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் வசந்த் மற்றும் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரைப்பிரபலங்கள் பல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால், நன்னிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மறைந்த கே. பாலசந்தர், வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் சிகரம் தொட்டவர். கருப்பு வெள்ளை காலத்திலேயே கலைத்துறையில் கால் பதித்தவர் பாலசந்தர்.
காலத்தால் அழியாதவர். 1930 ஆண்டு ஜூலை 9ஆம் தேதி, அப்போதைய தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை அடுத்துள்ள நல்லமாங்குடி கிராமத்தில் பிறந்தவர் பாலசந்தர். மேடை நாடகத்துறையில் செயலாற்றிய பாலசந்தர், எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படம் மூலம் வசனகர்த்தாவாக திரைத்துறைக்குள் நுழைந்தவர். பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் நீர்க்குமிழி. நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்த நீர்க்குமிழி திரைப்படம் 1965ஆம் ஆண்டு வெளியானது. தைத்தொடர்ந்து வெளியான மேஜர் சந்திரகாந்த், எதிர் நீச்சல், பாமா விஜயம், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி ஆகிய திரைப்படங்கள், பாலசந்தரை இயக்குநர் சிகரமாக்கின. நாகேஷ், ஜெமினிகணேசன், சிவாஜி கணேசன் உள்ளிட்டோரை இயக்கியுள்ள பாலசந்தர், தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் நடிகர் ரஜினிகாந்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.


ஜெய்கணேஷ், விஜயகுமார், ஸ்ரீபிரியா, டெல்லி கணேஷ், சுஜாதா, ஷோபா, சரத் பாபு, நாசர், ராதாரவி, திலீப், விவேக், பிரகாஷ்ராஜ் என ஏராளமான கலைஞர்களை தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தியவரும் பாலசந்தரே. நாடகத்துறையில் சிறந்து விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி.சேகர் ஆகியோரும் பாலசந்தரால் திரையுலகிற்கு வந்தவர்கள். தமிழ் மொழியில் எண்ணற்ற படங்களை இயக்கியுள்ள பாலசந்தர், இந்தியில் ஏக் துஜே கேலியே உட்பட 3 படங்களை இயக்கியிருக்கிறார். கலைத்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக கலைமாமணி, பத்மஸ்ரீ ஆகிய பட்டங்களை வென்ற இயக்குநர் சிகரத்திற்கு மகுடமாக, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் மத்திய அரசு வழங்கியிருக்கிறது.