தமிழ்நாடு

``எதற்கும் அனுமதி அளிக்காத ஒரு ஆளுநர், தமிழகத்திற்கு தேவைதானா?”- சீமான் பேட்டி

``எதற்கும் அனுமதி அளிக்காத ஒரு ஆளுநர், தமிழகத்திற்கு தேவைதானா?”- சீமான் பேட்டி

webteam

“ஆன்லைன் மசோதா, கூட்டுறவு சங்க திருத்த மசோதா என எதற்கும் அனுமதி அளிக்காத ஒரு ஆளுநர், அவசியமானவர்தானா?” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் 41 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அவருடைய படத்திற்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றியபின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “அரசியலில் எளிமையாக இருந்தவர் கக்கன். மேலும் அரசு பேருந்திலேயே எப்போதும் பயணம் செய்தவர் கக்கன். ஊழல், லஞ்சம் என எதையும் தன் பக்கம் நெருங்கவிடாமல் அரசியலில் முன் உதாரணமாக திகழ்ந்தவர் அவர்” என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி பேசிய சீமான், “சென்னையில் மீண்டும் ஒரு லாக் அப் மரணமா? திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது வேறொரு நிலையாக மாறிவிட்டது. காப்புக்காடு சுற்றி கனிம வளங்கள் எடுப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது. இத்திட்டத்தை ஏற்கனவே நாம் தமிழர் கட்சி எதிர்த்து இருக்கிறது. இதனால் பெரும் பாதிப்பு இருப்பதால், அரசின் நடவடிக்கையை அனுமதிக்கமாட்டோம். பரந்தூர் விமான நிலையம் அவசியம் இல்லாதது.

ஏற்கனவே இருக்கும் விமான நிலையம் போதுமானது தான். ஆனால் இந்த திட்டம் நன்மைகள் தொடர்பாக ஏன் அமைச்சர்கள் விவரிப்பதில்லை. நான் இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சரிடம் விவாதிக்க கூட தயாராக இருக்கிறேன். இதுவொருபக்கம் என்றால், ஆளுநர் தமிழகத்திற்கு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் மாநில அரசின் எந்த மசோதாவுக்கும் அனுமதி அளிப்பதில்லை. குறிப்பாக கூட்டுறவு சங்க மசோதா, ஆன்லைன் ரம்மி மசோதா என எதற்கும் அனுமதி அளிக்காமல் இருக்கிறார் அவர்” என விமர்சித்தார்.

தொடர்ந்து, “வாரிசு அரசியல் தொடர்பாக மக்களிடம் தான் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வாரிசுகள் அதிகாரத்திற்கு மட்டும் தான் வருகிறார்கள். ஏன் ஆசிரியர் பணி, ராணுவ துறைக்கு செல்வதில்லை? திமுக மூத்த தலைவர்கள் கூட உதயநிதி மகன் அரசியலுக்கு வருவதுக்கு பற்றி பேசுகின்றனர். கட்சியில் அடிமையாக தான் இருக்கிறார்கள்” என்றார். கல்வி குறித்து பேசுகையில், “நம்ம ஸ்கூல் பவுண்டேசன் நடைமுறை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏன் கல்வியை முழுமையாக அரசே ஏற்கலாம்தானே? இந்த குழுவிற்கு நியமித்த தலைவர் மீதே பல குற்றச்சாட்டு இருக்கிறது” என விமர்சித்தார்.

பின், “நாடாளுமன்ற தேர்தலை முன் கூட்டியே கூட மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்கிறது” என தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகை குறித்து பேசுகையில், “பொங்கல் பண்டிகைக்கு இலவசம் அறிவிக்கும் மாநில அரசு விவசாயிகளின் உற்பத்தி, அதற்காக கிடைக்கும் கூலி தொடர்பாக அக்கறை காட்டுவதில்லை” என விமர்சித்தார். அண்ணாமலை கை கடிகாரம் பற்றி பேசுவதை விட மக்கள் பிரச்னை தொடர்பாக பேசலாம் என பதில் அளித்தார்.