'ஒரு குறிப்பிட்ட மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு சொல்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்' எனத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.
தீபாவளி பண்டிகை வருகிற 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதே நாளன்று மகாவீர் முக்தி நாளும் கடைக்கப்பிடிக்கப்படுவதால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு, இறைச்சிக்கடை உரிமையாளர்களையும், தீபாவளி நாளில் இறைச்சி உணவை விரும்புவோரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என இறைச்சிக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும், பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கையை பரிசீலித்து, தீபாவளியன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக கூறியுள்ளது. அதேநேரத்தில், ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள இடங்களில் மட்டும் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது, ''சைவத்தைப் போல அசைவமும் ஒரு உணவுமுறை. கோவில்களில் கிடாய் வெட்டிப் பொங்கல் வைக்கும் மரபு நம்முடையது. அப்படியிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு சொல்வது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். பெரும்பான்மை வாதம் ஆபத்தானது. பெரும்பான்மையோர் அசைவம் சாப்பிடுவதால் சைவம் சாப்பிடுபவர்களது பழக்கத்தை கேள்விக்குள்ளாக்க முடியாது. அப்படி செய்யவும் கூடாது. அதேபோல் தான் இதுவும். ஒவ்வொருடைய தனிப்பட்ட நம்பிக்கைகளும் வீட்டிற்குள் தான் இருக்கவேண்டும். பொதுவெளியில் அல்ல.
நமது மண்ணில் நமது மரபும், நமது கலாச்சாரமும், வாழ்வியலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசு இம்மாதிரியான நிர்ப்பந்தங்களுக்குப் பணியக்கூடாது. தமிழக மண்ணில் இதுபோன்ற உணவுத் தூய்மைவாத ஆர்எஸ்எஸ் சிந்தனைகளை ஊக்குவிக்கக்கூடாது. அது நீண்டகால நோக்கில் நமது மண்ணிற்கும், மரபிற்கும், எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.