தமிழ்நாடு

அதிமுக ஜெயகோபாலை அக்டோபர் 11 வரை சிறையிலடைக்க உத்தரவு

அதிமுக ஜெயகோபாலை அக்டோபர் 11 வரை சிறையிலடைக்க உத்தரவு

Rasus

பேனர் விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபர் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். எனினும் ஜெயகோபால் கடந்த 14ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்தார். இதனிடையே 15 நாட்களுக்கு பின் அவரை கிருஷ்ணகிரியில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயகோபால், பேனர் வைத்தது தவறுதான் என்று நீதிபதி முன்பு ஒத்துக்கொண்டார். தொடர்ந்து 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி ஸ்டார்லி உத்தரவிட்டார்