தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்

Sinekadhara

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஜைக்கா நிதி நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்தானது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்கப்படாத நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜைக்கா நிதி நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணிகள் துவங்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் ஜைக்கா நிதி நிறுவனத்துடனான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் எழுப்யிய கேள்வி மூலம் தெரியவந்துள்ளது.

பாவூர்சத்திரத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் எப்பொழுது இறுதிக்கட்ட கையெழுத்தாகும், திட்ட மதிப்பீடு 1264 கோடியிலிருந்து 2 ஆயிரம் கோடியாக உயர்த்த காரணம் என்ன, 736 கோடி ரூபாய்க்கான திட்ட மதிப்பீடு குறித்த பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ளது மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

இந்நிலையில், எய்ம்ஸ் அமைப்பதற்கான கடன் ஒப்பந்தத்தில் கடந்த மாத இறுதியில் கையெழுத்தாக்கியுள்ளதாகவும், கடன்தொகை பெறப்பட்ட பின்னர் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளதன் முழு விவரங்களை வழங்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜைக்கா நிதி நிறுவனத்திடம் போடப்பட்டுள்ள கடன் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் ஏற்பட்டுவந்த தாமதம் காரணமாக எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கப்படாத நிலையில் கடந்த சில நாட்களாக மதுரையில் எய்ம்ஸ் அமைவது பேசுபொருளாகி வந்த நிலையில் தற்போது கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.