தமிழ்நாடு

குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவிடமா?: ரத்து செய்ய வழக்கு

குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவிடமா?: ரத்து செய்ய வழக்கு

webteam

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கட்ட பொதுப்பணித்துறை சார்பில் விடப்பட்ட 43.63 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது

ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கும் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தொடர்ந்துள்ள வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்தக் கூடுதல் மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் விதிக்கப்பட்டதாகவும், இதுவரை அந்தத் தொகை வசூலிக்கப்படாத நிலையில் அரசு செலவில் நினைவிடம் அமைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.  ஒரு குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவிடம் அமைத்தால் எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடம் கட்டக் கூடாது என விதிகள் உள்ள நிலையிலும், நினைவிடம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை டெண்டர் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  ஜனவரி 11ஆம் தேதி வெளியிட்டு, அதில் பங்கேற்க கடைசி நாளாக பிப்ரவரி 7ஆம் தேதியை அறிவித்துள்ள 43.63 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.