அலங்காநல்லூரை அதிர வைத்த ஜல்லிக்கட்டு காளை ராவணன் உயிரிழந்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. காளையின் உடலை கண்டு கிராம மக்கள் கதறி அழுதனர்.
புதுக்கோட்டை 2020 ல் மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், நெம்மேலிபட்டியைச் சேர்ந்த தடகள வீராங்கனையும், காவல் உதவி ஆய்வாளருமான அனுராதாவின் ஜல்லிக்கட்டு காளையான ராவணன் நின்று ஆட்டம் காட்டியது. ராவணனின் வீரத்தை கண்ட ஜல்லிக்கட்டு பேரவையினர் அடுத்த நாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அழைப்பு விடுத்தனர்.
அங்கும், 15 நிமிடங்களுக்கு மேல் களத்தில் நின்று விளையாடியது ராவணன் காளை. இப்படி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ராவணன் காளை கடந்த 14ஆம் தேதி முரட்டுசோழகம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த இராவணன் காளையை வாடியின் எல்லையில் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்து பத்து நாட்களாக காளையை தேடிவந்தனர். இந்நிலையில், தச்சங்குறிச்சி கிராமத்தின் அருகே காட்டுப்பகுதியில் இராவணன் காளை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட ராவணன் காளைக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாம்பு கடித்து காளை உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பலரும் நெம்மேலிப்பட்டி கிராமத்திற்கு வந்து ராவணன் காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் ராவணன் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.