திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், இருபத்தி ஒரு மாதகால ஊதியக்குழுவில் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடுவது உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அணி அணியாக வந்த அவர்கள், சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது தடையை மீறி முற்றுகையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து பிறகு அறிவிக்கப்படும் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சேலத்தில் கூட்டாக தெரிவித்துள்ளனர்.