தமிழ்நாடு

"ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதியில்ல; ஆனா கடல்ல பேனா வைக்க 89 கோடி இருக்கு!"-டிடிவி தினகரன்

"ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதியில்ல; ஆனா கடல்ல பேனா வைக்க 89 கோடி இருக்கு!"-டிடிவி தினகரன்

webteam

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசு, தனது ஆட்சியை திராவிட மாடல் என சொல்வது ஏற்புடையதல்ல என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

`சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 5 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டி.பி.ஐ வளாகத்தில் நேரில் சந்தித்து இன்று பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் “இடைநிலை ஆசிரியர்கள் சம ஊதியம் கேட்பது நியாயமான கோரிக்கை. அதற்கு திமுக அரசின் எதிர் செயல்பாடு வேதனை அளிக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை கூட அரசு காலம் தாழ்த்துவது ஏற்படையது அல்ல. இதேவிஷயத்துக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். தற்போது ஆட்சிக்கு வந்தபின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இது சரியானது அல்ல” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில், “5 வது நாளாக ஆண்கள், பெண்கள் என பல மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் இந்த அரசு, தங்களின் ஆட்சியை திராவிட மாடல் என சொல்வது சரியானதல்ல. ஆசிரியர்களுடன் அரசுத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

அதேபோல் முதல்வர் இவர்களை சந்திக்காமல் இருப்பது சரியான அனுகுமுறை இல்லை. மேலும் ஆசிரியர்கள் கோரிக்கைக்கு நிதியில்லை என சொல்லும் திமுக அரசு, கடலில் போனா வைப்பதற்கு மட்டும் எப்படி 89 கோடி செலவு செய்ய முடியும்? போராடி வரும் ஆசிரியர்கள் நிலையை பார்த்தால் புத்தாண்டு வாழ்த்து கூட சொல்ல முடியவில்லை” என தெரிவித்தார்.