ஜப்பான் இளைஞர் ஒருவர் தன் உயிரைக் காப்பாற்றிய தமிழர்களுக்கு நன்றி சொல்ல வேண்டி திருச்சி வந்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் இஷாவோ. சுற்றுலாவிற்கு கடந்த ஆண்டு தமிழகம் வந்திருந்த இவர், திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பேருந்தில் ஏறிய போது தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்தக் காயங்களுடன் சுயநினைவை இழந்து சாலையில் கிடந்தார். அவரை இரண்டு செய்தியாளர்களும் பொதுமக்களும் அருகில் இருந்த ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர், இஷாவோ திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 20 நாட்கள் சிகிச்சை மேற்கொண்டு நினைவை மீண்டும் பெற்றாலும், அவரால் பல்வேறு விவரங்களை தெளிவாக கூறமுடியவில்லை. அவரது பாஸ்போர்ட் மற்றும் இதர ஆவணங்களைக் கொண்டு ஜப்பான் தூதரகத்தின் மூலம் அவர் மீண்டும் அவரது சொந்த நாட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், அங்கு மேல் சிகிச்சைகளை முடித்துவிட்டு தனது உயிரைக் காப்பாற்றிய நபர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் திருச்சி வந்தடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையின் முதல்வர் அனிதாவிடம் நன்றி தெரிவித்துவித்தார். அது மட்டுமல்லாமல், தன்னைக் காப்பாற்றிய செய்தியாளர்களை முகநூல் மூலம் அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டார்.