தமிழ்நாடு

"வைகோ ராசி இல்லாதவர் என்பதற்கு இந்த தேர்தலில் விடை கிடைத்துள்ளது" - துரை வைகோ பேட்டி

"வைகோ ராசி இல்லாதவர் என்பதற்கு இந்த தேர்தலில் விடை கிடைத்துள்ளது" - துரை வைகோ பேட்டி

kaleelrahman

இனி வரும் தேர்தல்களில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் வைகோ ராசி இல்லாதவர் என்பதற்கு இந்த தேர்தலில் விடை கிடைத்துள்ளது எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கூறியுள்ளார்.

மதிமுகவின் 28-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ (துரை வையாபுரி என்ற பெயரை தற்பொழுது மாற்றியுள்ளார்) கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சூழ்ந்திருந்த இருண்ட காலம் முடிவுக்கு வந்துள்ளது.. உதித்தது உதய சூரியன். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் பல சிக்கல்கள், பிரச்னைகள் தமிழகத்தை சூழ்ந்திருந்தது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2-வது அலை வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் அஜாக்கிரதையால், 2-வது அலை மிகவும் அபாயகரமாக போய் கொண்டுள்ளது.

பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்பதை போல், தமிழக அரசு பொறுப்பை திமுக ஏற்க உள்ளது. இந்த நேரத்தில் மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்கள், கிராமங்களில் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. தினமும், மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லை, வென்டிலேட்டர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கதறி அழுகின்றனர்.

இந்த பிரச்னை கையை மீறி சென்றுக்கொண்டுள்ளது. இதனால் தான் மதிமுக தலைவர் வைகோ, கொரோனா 2-வது அலையை எப்படி சமாளிப்பது என 5 முக்கியமான அம்சங்களை எழுதி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார். இதில், முக்கியமானது 10 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது.

அதிமுக அரசு அந்த பணியிடங்களை நிரப்பவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது பெரிய சவாலாக உள்ளது. அதே போல், கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவது தான் எனது முதல் பணி என ஸ்டாலினும் தெரிவித்துள்ளார். இது பெரிய சவால் தான். இந்த சவாலை ஸ்டாலின் சமாளிப்பார் என்ற நம்பிக்கை கூட்டணி கட்சிகளுக்கும், மக்களுக்கும் உள்ளது.

மதிமுகவை பொறுத்தவரை, குறுகிய காலகட்டத்தில் புதிய சின்னம் கொடுத்து அதனை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதில் சில சிரமங்கள் இருந்ததால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அடுத்த தேர்தலில் எங்களுக்குரிய தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

சமூக வலைதளங்களில் மூடநம்பிக்கையோடு வைகோவை ராசி இல்லாதவர் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது. கேரளாவில் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும், தமிழகத்தில் ஸ்டாலினும் வெற்றி பெற்றுள்ளனர். வைகோ ராசி இல்லாதவர் கிடையாது. கடந்த காலங்களில் அவர் கூட்டணி வைத்த கட்சிகள் வென்றுள்ளதாக தெரிவித்தார்.