அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டத்தை தற்போதைய திமுக அரசு மூடுவிழா செய்ய செயல்பட்டு வருவதாக சசிகலா குற்றம் சாட்டினார்.
சேலத்தில் இருந்து இரண்டு நாள் சுற்றுபயணம் தொடங்கிய சசிகலா, இரண்டாவது நாளாக நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் தொண்டர்கள் சந்தித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் மக்கள் நலனுக்காக பல்வேறு ;திட்டங்களை கொண்டுவந்த செயல்படுத்தினர். ஆனால், இந்த திட்டங்களை திமுக அரசு மூடுவிழா செய்வதற்காக செயல்பட்டு வருகிறது.
கடந்த 15 மாதங்களில் திமுக அரசு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பிய சசிகலா, மக்கள் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில் ஆவின் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு மூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் பேருந்து கட்டணம் உயரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வாக்கு செலுத்திய மக்களை கசக்கி பிழிவது திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார். மக்கள் விரோத திமுக அரசை அப்புறப்படுத்த அதிமுக வலிமையோடு இருக்க வேண்டும். தமிழக மக்கள் நல்ல முடிவெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக அரசிற்கு தமிழக மக்கள் பாடம் புகுட்ட வேண்டும் என்றார்.