தமிழ்நாடு

உடையாளூரில் இருப்பது ராஜராஜ சோழனின் சமாதியா ? அகழ்வாராய்ச்சியை தொடங்கியது தொல்லியல் துறை !

உடையாளூரில் இருப்பது ராஜராஜ சோழனின் சமாதியா ? அகழ்வாராய்ச்சியை தொடங்கியது தொல்லியல் துறை !

webteam

கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜன் சமாதி இருக்கின்றதா என்பதை ஆராய்ச்சி செய்து அறிக்கை அனுப்ப வேண்டுமென தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தொல்லியல் துறையினர் நேற்று தங்களது அகழ்வாராய்ச்சிக்கான முதல் கட்ட பணிகளை தொடங்கினர்.

திருக்கோயிலூரில் பிறந்த ராஜராஜ சோழன் கி.பி.985-ம் ஆண்டு சோழப் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டு தென்னிந்தியா முழுவதும் தனது பேரரசைப் பரப்பினார். தென்னிந்தியாவில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல சிற்றரசர்களை வெற்றி பெற்று வந்தார்.

அப்போது, தன்னுடைய வாழ் நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் எனக் கருதிய ராஜராஜன் தன்னுடைய தெய்வபக்தியையும், கலையை நேசிக்கும் விதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோயிலை கி.பி.1010-ம் ஆண்டில் கட்டி முடித்தார். பின்னர் கி.பி.1012-ம் ஆண்டில் ராஜராஜ சோழன் தனது பட்டத்தைத் துறந்து, தன் மகன் ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டினார்.

பின்னர் மகனது ஆட்சிக் காலத்தில் தனது வாழ்நாளை பழையாறை யில் கழித்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அப்போது, கி.பி.1014-ல் ராஜராஜ சோழன் காலமானார். பின்னர் மாறவர்மன் சுந்தர பாண்டியன் தன் மூதாதையர்கள் மீது சோழர்கள் போர் தொடுத்ததை எண்ணிப், பழிவாங்கும் நோக்கத் தில் சோழப் பேரரசு மீது போர் தொடுத்து பழையாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அழித்தான். அதில் எஞ்சிய இடங்களில் ஒன்றான உடையாளூர் பால்குளத்தம்மன் கோயிலில் இன்றும் ராஜராஜன் நிறுவிய கல்வெட்டு ஒன்று ஆதாரமாக உள்ளது.

உடையாளூர் கிராமத்தில் ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்ப தாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் ,"கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், வங்காள விரிகுடா அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராஜராஜ சோழனுக்கு மிகப் பெரிய சிலை அமைக்க வேண்டும்". என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட  நீதிபதிகள் எல்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அமர்வு தமிழக அரசுக்கு அகழ்வாராய்ச்சி மூலம் ராஜராஜசோழன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் உடையாளூர் தானா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், தங்கதுரை, பாஸ்கர், லோகநாதன், சக்திவேல், ஆகியோர் கொண்ட ஐவர் குழு உடையாளூர் கிராமத்திற்கு வந்தனர். அங்கு ராஜராஜ சோழன் சமாதி அமைந்திருப்பதாக கூறப்படும் இடத்தை சுற்றி தானியங்கி விமானம் 3 மூலம் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பூமிக்கு அடியில் ஒரு மீட்டர் தூரம் அளவிற்கு என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்பதை தற்பொழுது ஆய்வு செய்து அவற்றை படங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.