தமிழ்நாடு

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

kaleelrahman

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அடுத்தவர்கள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படப்போவதில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது "
அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் முடிவு செய்ய முடியும். அதனை ஏற்கெனவே முடிவு செய்து அறிவித்து விட்டோம். எனவே அந்த நிலைப்பாட்டில் (முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி) தான் நாங்கள் தேர்தலை சந்திப்போம்.


அடுத்தவர்கள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படப்போவதில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார். அரசின் கடமை மக்களுக்கு உதவி செய்வதுதான்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூபாய் 2500-ஐ முதல்வர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதிலும் அரசியல் சாயம் பூசினால் அது அவர்களின் விருப்பம்.”என்றார்.

மேலும் கமல்ஹாசனின் அரசியல் குறித்து, “நடிகர் கமல்ஹாசன் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அவரால் தேர்தல் நேரத்தில் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தடம் பதித்ததும் இல்லை, இனி பதிக்க போவதுமில்லை. அவர் உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறார். அதற்குத்தான் அவருக்கு நாங்கள் பதில் கூறி வருகிறோம். அவரை ஒரு பொருட்டாக நினைத்து பதில் கூறவில்லை. கமல்ஹாசன் மட்டுமல்ல யாராக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தவறான கருத்துகளை தெரிவித்தால் அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிமுகவின் சாதாரண தொண்டரும் பதிலடி கொடுப்பார்கள்”என்றார்.